internet

img

உங்கள் ஃபோனும் பேட்டரியும் அலைபேசி பாதுகாப்புக் குறிப்புகள்

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பலருக்கும் உள்ள பிரச்சனை 4000 MAh, 5000MAh  பேட்டரி திறன் இருந்தாலும் ஒரு நாளிலேயே தீர்ந்துவிடுகிறது என்பதுதான். உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி நீடித்திருக்க சில விதிமுறைகளை நமக்கு நாமே நிர்ணயித்துக் கொண்டு கடைபிடித்தாலே போதும். இதற்காக தனியாக ஆப்கள் எதையும் நிறுவ வேண்டாம். 

அவசியம் இல்லாதது வேண்டாம்
உங்கள் மொபைலில் தேவை இல்லாத ஆப் இருந்தால் அதை முதலில் டெலிட் செய்ய வேண்டும். ஃபேக்டரி டிஃபால்ட் முறையில் வாங்கும்போது பதியப்பட்ட ஆப்கள் எனில் அவற்றை Force Stop செய்து நிறுத்தி விடுங்கள்.  பேஸ்புக் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதன் லைட் வெர்சன் பயன்படுத்தினால் பேட்டரி திறன் குறைவாகவே செலவாகும். இது தவிர ஆன்லைன் பொருள் விற்கும் ஆப்களை டெலிட் செய்யுங்கள். இதுபோன்ற ஆப்களை தேவைப்படும்போது நிறுவிக் கொண்டு பிறகு நீக்கிவிடும் முறையை பின்பற்றலாம். செய்தி ஆப்கள் ஒன்றிற்கு மேல் வைப்பதைத் தவிர்த்திடுங்கள். தொடர்ச்சியாக விளம்பரங்கள் மற்றும் புதிய அப்டேட்களை ஆப்கள் தேடிக்கொண்டே இருப்பதால் கூடுதல் பேட்டரி செலவாகும். அதிகம் பயன்படுத்தாத ஆப்கள் என்றால் நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ்களை  நிறுத்திவைக்கவும்.

தேவைப்படுவதை மட்டும் இயக்குங்கள்
டேட்டா ஆன் செய்தல், ஹாட்ஸ்பாட் இயக்குதல்,  லொகேஷன் ட்ரெக்கிங் ஆகியவற்றை அணைத்து வையுங்கள். இந்த மூன்றும் கூடுதல் பேட்டரியை எடுத்துக் கொள்ளக் கூடியவை. டேட்டா பயன்பாடு 24 மணி நேரமும் இயங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் முந்தைய ஆப் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். லொகேஷன் ட்ராக் மற்றும் ஹாட்ஸ்பாட்  விரைவாக பேட்டரி திறனிழக்கச் செய்யும் முக்கியமான காரணிகள். தவறுதலாக ஆன் ஆகியிருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நலம்.

தேவைக்கு பயன்படுத்துதல்
ஃபோனின் திரை வெளிச்சமும் பேட்டரியின் சக்தியை இழக்கச் செய்யும் ஒரு காரணிதான், பகல் நேரங்களில் பிரைட்னஸ் அதிகம் வைத்திருப்போம். அறைகளுக்குள்ளும், மாலை நேரங்களிலும் வெளிச்சம் கூடுதலாக தேவையில்லை. உங்கள் கண்களுக்கேற்ற சராசரி அளவை தேர்வு செய்யலாம்  அல்லது தேவைப்படும்போது அதிகப்படுத்தி பிறகு குறைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதிகமான ரெசல்யூசன் அளவுள்ள படங்கள், ஸ்கிரீன்சேவர் தீம்கள் வைத்திருப்பது கூடுதல் பேட்டரியை செலவழிக்கும். தற்போது வரும் AMOLED  டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் ஃபோன் நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் பின்புல வண்ணத்தை கருப்பு நிறமாக வைத்துக் கொள்வது பேட்டரி திறனை மேம்படுத்தும். ஆப்கள் தரும் டார்க் மோட் வசதிகளையும் பயன்படுத்தலாம்.

சூடாகும் ஸ்மார்ட்ஃபோன்
அதிகமான ஆப்கள் செயல்பாட்டில் இருக்கும் தருணங்களில், சார்ஜ் செய்யும்போது ஃபோன்கள் சூடாகும். ஹார்ட்வேர் பிரச்சனைகளாலும் பேட்டரி சூடாகும். ஸ்மார்ட்ஃபோன் சூடாவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக செய்யவேண்டியது அதற்கு பேக் கவர் போட்டிருந்தால் அதனை நீக்கவும். தேவையற்ற ஆப் பயன்பாடுகள் செயல்பாட்டில் இருக்கிறதா என்று பார்த்து நிறுத்தவும். டேட்டா கனெக்சனை ஆஃப் செய்யவும். வெப்பம் மிகுந்த பகுதிகளில், சூரிய ஒளியில் நேரடியாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும்.  வெப்பமான பகுதிகளில் ஃபோனை வைப்பதால் பேட்டரி மட்டுமல்ல டச் ஸ்கிரீனும் சரியாக வேலை செய்யாமல் போகும். கார்களில் பயணிப்பவர்கள் என்ஜின் பகுதி, டாஸ்போர்டில் வைப்பதைத் தவிர்க்கவும். சார்ஜ் ஏற்றும்போது காற்றோட்டமான இடங்களில் டேபிள் போன்ற கடினமான பொருட்கள் மீது வைக்கவும். மெத்தை, சோஃபா குஷன்கள் மீது வைக்க வேண்டாம்.

முழுமையான சார்ஜ் தேவை
ஒரு சார்ஜ் என்பது ஒரு சைக்கிள் என்று கணக்கிடப்படுகிறது. சைக்கிள் எண்ணிக்கையை சராசரியில் வைத்திருக்க முறையான சார்ஜ் அவசியம். சார்ஜ் அளவு 10 முதல் 30 சதவீதத்திற்குள் இருக்கும்போது சார்ஜ் போடுவது நல்லது.  90 சதவீதம் அல்லது அதற்கு மேல் சார்ஜ் ஆகவேண்டியது அவசியம். 100 சதவீதத்தைத் தாண்டியும் சார்ஜில் தொடர்ச்சியாக இருப்பது நல்லதல்ல. முழு சார்ஜ் ஆனபிறகு கட்ஆஃப் செய்யும் தொழில்நுட்பம் இன்று இருந்தாலும், அந்த சர்க்யூட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பழுதடையலாம். எனவே, அதிக நேரம் சார்ஜ் போடுவது ஃபோனின் ஒவ்வொரு பாகத்தையும் பாதிக்கும். முழுமையான சார்ஜ் என்று இரவு முழுவதும் சார்ஜ்  ஏற்றுவது முற்றிலும் தவறு. ஒரு ஃபோனின் முழுமையான சார்ஜிங் காலத்தைக் கணக்கிட்டு உங்களுடைய வேலைத் தன்மைக்கு ஏற்ற நேரத்தை நீங்களே தேர்வு செய்து கொண்டு பின்பற்றவும்.உங்கள் ஃபோனுக்கு ஏற்ற சார்ஜர்களைப் பயன்படுத்துங்கள். மற்ற நிறுவன ஃபோன்களின் சார்ஜர்களைப் பயன்படுத்தும்போது  1Amp, 2Amps போன்ற அளவுகள் மாறுபடலாம். உங்கள் ஃபோனுக்கு ஏற்ற சார்ஜரை தெரிந்து பயன்படுத்துங்கள். பவர் பேங்க் பயன்படுத்தும்போதும் 1Amp, 2Amps அளவு போர்ட்களை கவனித்து பயன்படுத்தவும். 2500 MAh திறனுக்கும் குறைவான பேட்டரிகளுக்கு பொதுவாக 1Amps தேவை. 3000 MAh-க்கு மேற்பட்ட பேட்டரி சக்தி கொண்ட ஃபோன்களுக்கு 2Amps போர்ட்கள் பயன்படுத்தவேண்டும். இதிலும் தற்போது கூடுதல் 10 Watts, 18 Watts கொண்ட அதிவேக சார்ஜி தொழில்நுட்பங்களை கையாளும் ஃபோன்களும், சார்ஜர்களும் வந்துவிட்டதால் சரியானதை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருங்கள்.

====என்.ராஜேந்திரன்====

;